Tuesday, 30 April 2013

தஞ்சாவூர் பெரிய கோவில்



                                           தஞ்சாவூர் பெரிய கோவில் 







தஞ்சை பெரியகோவில் : தெரியாத தகவல்கள் 

கோயில் எப்படி கட்டப்பட்டது ???? என்ற தகவல் உங்களுக்காக. 
படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.. இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் . தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன். 
 
தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது. இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்.. 


பெரிய கோயில் அளவுகோல்... 
எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம். 

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை. 

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார் 

1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும். 


பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு 

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர். 

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது. 


சாரங்களின் அமைப்பு 
கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது. 

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. 

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் , நேர்ச்சட்டங்கள் , குறுக்குச் சட்டங்கள் அனைத்தும் முட்டுப் பொருத்துகள் மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின. 

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது. 

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. !!





Monday, 29 April 2013

கடலுக்கு அடியில் தமிழர் நகரம்


                              கடலுக்கு அடியில் தமிழர் நகரம்     


கடலுக்கடியில் பூம்புகார்.. 







கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. 

கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார். 

வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”

இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்? கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா? அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுக ள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா? 

உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்கமா? உறைந்து போய் விட்டதா? புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் எற்றப்பட்டிருக்க வேண்டாமா? காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது? பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக்காட்சிகளுமில்லை. 

தமிழறிஞர்கள் நடத்தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமா? பூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா? சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது? தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை? நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? 

அறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை? கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும். குமரிக்கண்டம்‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது. 

இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது” 

1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள் 

2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு 

3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு 

4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள் 

5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள். இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தௌ¤வாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். (தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர் ) 

1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது. 

2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன. 

3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன. 

4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன. 

5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன” என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். இதுபற்றி ஆய்வுகளும் தேவை. 
தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள். வாயடைத்துப் போகும் ஆரியம்! நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை. 
ஆயின் என்சைக்ளோ பீடியா அப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம் உள்ளது. தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா? அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா? தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன்? 

பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சப்பானிய தீவுக்கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல் கண்காணிப்படுகிறது. 
இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா? 

வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்? தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா? 

இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப்பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா? 

புதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில் National Institute Of Oceano-Graphy மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின் கடமையாகும். தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காத, நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். 

Thursday, 25 April 2013

ஆட்சிமொழி




                                                 ஆட்சிமொழி 















         ஆட்சிமொழி கவிஞர் இரா .இரவி 



தமிழறிஞர் பாவாணர் தேவநேயப் பாவாணர் குறிப்பிட்டது போல், உலகின் முதன் மொழி நம் தமிழ் மொழி.தமிழராகப் பிறந்ததற்கே உலக மனிதர்கள் யாவரும் பெருமை கொள்ள வேண்டும். என்ன வளம் இல்லை நம் தமிழ்மொழியில், ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில். மற்ற மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி நம் தமிழ்மொழி. 
தாத்தா, பாட்டி, அம்மா,அப்பா, அண்ணன், தம்பி, அக்காள்,தங்கை,மாமா, அத்தை, நாத்தனார், மைத்துனன், கொளுந்தன்-இப்படி தமிழ்மொழியைத் தவிர வேறு எந்த மொழியிலும் இத்தனை உறவுச் சொற்கள் கிடையாது. 
அதனால் தான், மகாகவி பாரதி பாடினான், யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் 
இனிதாவது எங்கும் காணோம் என்று 
இனிமையான நம் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அரசுப் பணியாளர்களின் கடமை. தமிழக அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழியாக முழுவதும் நடைமுறைக்கு வரவில்லை. காரணம் பழக்கத்தின் அடிப்படையில் பழைய கோப்பினைப் பார்த்து அதன்படியே ஆங்கிலத்தில் எழுதி வருகின்றனர். வரைவுகளில் தமிழில் எழுதினால் எழுதுபவருக்கும் புரியும்,வரைவு பெறுபவர்களுக்கும் நன்கு புரியும். 
நினைவூட்டு மடலைக் கூட பலர் ஆங்கிலத்தில் எழுதி வருகின்றனர். 
பார்வை காண்க, பதில் வரைக நான்கே சொற்களில் நினைவூட்டு மடல் வரையலாம். 


தமிழில் எழுதினால் சுருக்கமாக எழுத முடியாது என்று கருதி வருகின்றனர். வயிற்று வலி காரணமாக விடுப்பு எடுக்க வேண்டிய அரசுப் பணியாளர்,விடுப்புக் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதினார். காய்ச்சல் காரணமாக என்று எழுதினார். ஏன்? என்று கேட்ட பொழுது, ஆறாம் வகுப்பு படிக்கும் போது காய்ச்சல் காரணமாக விடுப்பு வேண்டும். என்று ஆங்கிலத்தில் எழுதிப் பழகியது இன்றும் தொடர்கிறது என்றார். இந்த நிலை தான் ஆங்கிலக் கடிதங்களால் ஏற்படும். தமிழ்நாட்டில் தமிழ் அலுவலர்கள் சந்திப்பு கூட்டம் நடக்கின்றது. இந்தத் தகவலை ஆங்கிலத்தில் அனுப்பு வேண்டிய அவசியம் என்ன? 
கடைநிலை ஊழியருக்கு விளக்கம் கேட்டு,ஆங்கிலத்தில் தருகின்றனர். அதிகம் படித்து இராத அவர் எப்படி அம்மடலை புரிந்து கொண்டு பதில் தர இயலும். எனவே ஆங்கிலம் தெரிந்த மற்றொரு நபரை அணுகி விளக்கம் தருகின்றார். ஆனால் அந்த விளக்கம் சம்மந்தப்பட்டவரின் உணர்வுகளை முழுமையாக புரிந்து கொண்டு தந்த விளக்கமாக இருக்காது. எனவே, தமிழ்நாட்டில் மடல்களில் யாவும் தமிழிலேயே இருக்க வேண்டும். 


பிற மாநிலங்களுக்கான மடல்கள் மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்த வேண்டும். 
வடமாநிலங்களில் இந்தியில் கையொப்பம் இட்டால் தான் சம்பளம் கிடைக்கும். 
வேறுமொழயில் கையொப்பம் இட்டால் சம்பளம் தர மாட்டர்கள். ஆனால் தமிழ்நாட்டில் தமிழில் கையெழுத்து போடுங்கள். என்று அறிவுறுத்த வேண்டிய அவல நிலை. அப்பாவிற்கான முன்னெழுத்தை பலர் ஆங்கிலத்திலேயே இட்டு வருகின்றனர். வெளிநாட்டில் அப்பா முன் எழுத்தை தமிழ் எழுத்தைப் போட்டு ஆங்கிலத்தில் கையெழுத்து யாராவது இடுவார்களா? 
இட்டால் ஏற்பார்களா? நம் நாட்டில் தான் இந்த நிலை. எனவே அனைவரும் முன்னெழுத்தை தமிழில் எழுத முன் வர வேண்டும். 
சங்க காலத்தில் தமிழே ஆட்சி மொழியாக இருந்தது என்பதற்கு பல்வேறு சான்றுகள் உண்டு. அன்று பயன்படுத்தப்பட்ட ஆட்சிச் சொல்கள் நிறைய உள்ளது. அவற்றில் முக்கியமானவை 
அவையம்,அவை,ஆசிரியர்,முனைவர்,கோட்டம்,சிறை,வேளாண்,முதல்வன்,மண்டபம், வானூர்தி, 
சீருடை,நாளங்காடி, நுகர்வோர்,அகவை, அமைச்சர், கண்காணிப்பு, கணக்கர், தாளாளர், 
நிர்வாகி இப்படி பல சொற்கள் அன்றே பயன்படுத்தப்பட்டு இன்று வரை வழக்கில் உள்ளது. ஆட்சிச் சொல் அகராதி என்ற நூல் தமிழக அரசு வெளியிட்டு, அரசு அலுவலகங்களில் உள்ளது. படித்து அறிந்து கொள்ளலாம். 
உணவுக் கலப்படம் உடலுக்குக் கேடு, மொழிக் கலப்படம் மொழிக்குக் கேடு என்பதை உணர்ந்து, பிறமொழிச் சொற்களை முடிந்த மட்டும் தவிர்க்க வேண்டும். 
தமிழ்ச் சொல் 
அவை, திரு, அரியணை, யானை, பிறமொழிச் சொல் 
சபை, ஸ்ரீ, சிம்மாசனம், கஜம். 
மொழி விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்தன. 


இனாம்,கலாட்டா, சாந்தி,தாசில்தார், தாக்கீது,பசலி,ஜப்தி,குமாஸ்தா,லத்தி, ஆஜர், பந்தோபஸ்த், ராஜினாமா, ஜமாபந்தி,ரத்து, முன்சீப், தாலுகா, இலாகா,சிரசுதார், மஸ்தூர், கிஸ்தி, பிரதேசம், ஆஸ்தி இப்படி பல சொற்கள் கலந்துள்ளன. 
இந்தச் சொற்களை மடல்களில் எழுதுவதையும், பேச்சில் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். 


சாக்கு, பீரோ, கக்கூஸ்,கபே, அலமாரி, மேஸ்திரி, சாவி,பிரவேசம், அமுல் இப்படி பல பிறமொழி சொற்கள் நமது தமிழ்மொழியில் கலந்து உள்ளது. இவற்றையும் தவிர்க்க வேண்டும். 
ஆட்சிச் சொல் அகராதி நூலில், தூய தமிழ்ச்சொற்கள் உள்ளன.அவற்றைப் பயன்படுத்த முன்வர வேண்டும். 


ஆங்கிலத்தில் பேசும் போது ஆங்கிலம் பயன்படுத்தலாம். தமிழில் பேசும் போது ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுவது தவறு. ஊடகங்களின் வருகையால் தமிங்கலம் பரவலாக்கப்பட்டு விட்டது. இவற்றைத் தவிர்க்க முன்வர வேண்டும். 
ஆங்கிலேயர்கள் ஆங்கிலம் பேசும் போது தமிழ் கலந்து பேசுவார்களா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். அரசு அதிகாரிகள் திட்ட விளக்க கூட்டங்களில் பேசும் போது சொல், பிறமொழிச் சொல் கலப்பின்றி, முடிந்தளவிற்கு நல்ல தமிழில் பேச வேண்டும். நல்ல தமிழில் பேசுவது கேலிக்குரியதாக ஆக்கப்பட்டுள்ள அவல நிலை மாற வேண்டும். நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரை விரட்டி விட்டோம். ஆனால் ஆங்கிலத்தை விரட்டாமல் பிடித்துக் கொண்டோம்.
தமிழ்மொழி மிகவும் நுட்பம் வாய்ந்தது. தமிழில் ஒரு புள்ளிக்கு கூட மதிப்பு உண்டு. கல்வி என்பதை புள்ளி போடாமல் கலவி என்று எழுதினால் பொருளே மாறி விடும்.எனவே தமிழ்மொழியை மிகவும் கவனமாக எழுத வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் வந்தார். என்பதை மாவாட்ட ஆட்சித் தலைவர் வந்தார் என்றால் ஒரு எழுத்தால் மிகப் பெரிய பொருள் குற்றம் வந்து விடும். எனவே கவனம் தேவை. 
காவல் துறையில் தமிழ் ஆட்சிமொழி கடைபிடிப்பதில் குறைபாடு உள்ளதாக ஆய்வு செய்த உதவி இயக்குனர்கள், தமிழ் வளர்ச்சித் துறையினர் தெரிவித்தனர். எனவே,காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை இவற்றை தமிழிலேயே எழுத வேண்டும். அப்போது தான் என்ன? எழுதி உள்ளது என்பது தெரியும், புரியும். அரசுப் பணியாளர்கள் அதிகாரிகளின் நாட்குறிப்பு, பயண நிரல் என யாவும் தமிழிலேயே எழுத வேண்டும். அரசுப் பணியாளர்கள், மக்கள் பணியாளர்கள் மக்கள் வரிப் பணத்திலிருந்து தான் சம்பளம் பெறுகின்றோம். மக்கள் மொழியான தமிழ் மொழியில் நடவடிக்கை நடைபெற பெற வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். 


அலுவலக ஆணை,செயல்முறை ஆணை, சுற்றறிக்கை யாவும் தமிழிலேயே இருத்தல் வேண்டும். செயல்முறை ஆணையில் நகராட்சியினர் மட்டுமே முன்னிலை என்று எழுத வேண்டும். மற்ற அலுவலர்கள் செயல்முறை ஆணையில் முன்னிலை என்று எழுதுவது தவறு, பிறப்பிப்பவர் என்று எழுதுவதே சரி. தமிழ் ஆய்வுக்கு வரும் உதவி இயக்குனர்களிடம் தங்களுக்கு எழும் கேள்விகளுக்கு,விடை கேட்டு தெரிந்து கொள்ளலாம். 


தாய்மொழி கல்வி தான் தேவை என்பதை மகாத்மா காந்தியடிகள், நோபல் கவிஞர் இரவீந்தரநாத் தாகூர் வரை அறிஞர்கள் அனைவருமே வலியுறுத்தி உள்ளனர். நாமும் நம் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியை தாய்மொழியாம் தமிழ் மொழியிலேயே வழங்க வேண்டும். அப்போது தான் சுயமாக சிந்திக்கும் அறிவு வளரும். ஆறிவியல் மேதை அப்துல் கலாம், ஆரம்பக் கல்வியை தமிழ் மொழியிலேயே பயின்றார். அதனால் தான் அவரால் சாதிக்க முடிந்தது. நாகரீகம் என்ற பெயரால் ஆங்கிலக் கல்வி பயிற்று மொழியாக ஆங்கிலம் கற்பித்து, குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றலை குறைத்து வருகின்னறனர். 
பாபா பிளாக் சிப் என்று ஒரு ஆங்கிலப் பாடல், கருப்பு ஆடே வா வா,மசிரு இருக்கா என்பதே இதன் பொருள். இந்தப் பொருள். 


எத்துணை பேருக்கு புரிந்தது, இதில் என்ன நீதி உள்ளது?


ரெயின் ரெயின் கோ அவே என்று ஒரு ஆங்கிலப் பாடல், மழை அடிக்கடி பொழியும் நாட்டில், விளையாட வேண்டும், மழையோ போ போ என்று எழுதப்பட்ட ஆங்கிலப் பாடலை வெப்ப பூமியான நமது நாட்டிற்கு மழை தேவை, இங்கு இந்தப் பாடலைப் பாடுவது பொருத்தமற்றது. மாமழை போற்றுதும் என்று பாடியவர்கள் நாம். தமிழ்ப் பாடல்களில் பொருள் உண்டு. செய்தி உண்டு. எனவே இனி கட்டாயமாக ஆரம்பக் கல்வியை அழகு தமிழிலேயே வழங்க வேண்டும். 


கணக்காயர் தணிக்கைக்கு பதிலை, ஆங்கிலத்திலேயே பல அலுவலகங்களில் எழுதி வருகின்றனர். தமி;ழில் எழுதலாம், தமிழில் எழுதினால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கணக்காயர் அலுவலகம் அறிவித்து உள்ளது. வணிக நிறுவனங்கள் பெயர்ப் பலகையை தமிழலேயே எழுத வேண்டும். 
அரசு அலுவலகங்களில் பெயர்ப்பலகை தமிழிலேயே இருக்க வேண்டும். அரசு இதற்கு நிதி ஒதுக்கீடு உள்ளது. தமிழ் ஆட்சி மொழி தொடர்பாக பல அரசாணைகள் உள்ளது. அரசுப் பணியாளர்கள் அரசாணைக்கு கட்டுப்பட்டு தமிழை ஆட்சி மொழியாக்க முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.சம்பள உயர்வு அரசாணை வந்தவுடன் நடைமுறைப்படுத்தி சம்பள உயர்வு பெறுவதைப் போல தமிழ் ஆட்சிமொழி அரசாணைகளை நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும். 
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வரும் ஆணைகள் முழுவதுமே தமிழில் வரவேண்டும். எழுத்துச் சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்து பல ஆண்டுகள் ஆன போதும்,இன்னும் அதைக் கடைபிடிக்காத அரசுப் பணியாளர்கள் பலர் உள்ளனர். அனைவரும் எழுத்துச் சீர்திருத்தத்தை கடைபிடிக்க வேண்டும். 
உலகில் எந்த மொழிக்கும் இல்லாத தனிச்சிறப்பு நம் மொழிக்கு உண்டு. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ்மொழி. 


மக்களாட்சி மக்களுக்கு புரியும் வகையிலேயே நடைபெற வேண்டும். எனவே தமிழ் ஆட்சிமொழி தமிழக அலுவலகங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.தமிழ் ஆட்சிமொழி அரசாணைகள் நடைமுறைப்படுத்த வேண்டும். 
தமிழ் ஆட்சிமொழி அரசாணைக்கு கட்டுப்படாத அரசுப் பணியாளர்களுக்கு தண்டனை வழங்குவதில் இனி தயக்கம் காட்டக் கூடாது. தண்டனை உண்டு என்று உணர்த்தினால் தான் ஆங்கிலத்தில் வரைவுகள் எழுதுவது தவறு என்பதை உணருவார்கள். அரசுப் பணியாளர்களின் மனத்திலும் மாற்றம் வர வேண்டும். ஆங்கிலம் உயர்ந்த மொழி என்ற தவறான கருத்தைப் போக்க வேண்டும். எங்கும் தமிழ்,எதிலும் தமிழ் என்ற நிலை வர வேண்டும்

 

உயர்நீதி மன்றத்திலும் தமிழில் வழக்காட உரிமை வேண்டும்.


 உயர்நீதிமன்றங்களில் வழக்கறிஞர் மட்டுமே வாதாடுகின்றார். அவர் என்ன பேசுகின்றார் என்பது வழக்கில் தொடர்புடையவர்களுக்கு புரிய வேண்டும். அப்போது தான் முழுமையான நீதி கிடைக்கும். சங்கம் வைத்த தமிழ் வளர்த்த மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை உள்ளது. அங்கு செந்தமிழுக்கு இடம் தர வேண்டும். தமிழை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்த நடுவணரசு உயர்நீதிமன்ற மொழியாகவும், நடுவணரசு ஆட்சி மொழியாகவும், தமிழை அறிவித்து தமிழுக்குப் பெருமை சேர்க்க வேண்டும்.

Wednesday, 24 April 2013

மன அழுத்தத்தை தவிர்க்க பத்து கட்டளைகள்...!


      மன அழுத்தத்தை தவிர்க்க பத்து கட்டளைகள்...! 









1.கடைசி நிமிடப் பரபரப்பைத் தவிருங்கள். 
எங்காவது செல்ல வேண்டுமென்றால் ஓர் அரை மணி நேரம் முன்பாகவே கிளம்புவது, காலையில் ஒரு பதினைந்து நிமிடம் முன்னதாகவே எழுந்து விடுதல், பயணத்திற்குத் தேவையானவற்றை முந்தின நாளே எடுத்து வைத்துக்கொள்வது, போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 

2.ஒரு நேரம் ஒரு வேலையை மட்டுமே செய்யுங்கள். 
எட்டு வேலைகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டு ஒன்பதாவது வேலையைச் செய்துகொண்டிருந்தால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். என்ன செய்யவேண்டும் என்பதைப் பட்டியலிடுங்கள். மிக முக்கியமான விஷயங்களை முதலில் செய்யுங்கள். எல்லா வேலைகளையும் செய்ய வேண்டுமென்ற கட்டாயமில்லை. போதுமான ஓய்வு நேரம் உங்கள் பட்டியலில் நிச்சயம் இருக்கட்டும். 

3.உங்களுக்கு மன அழுத்தம் தரக்கூடிய விஷயங்களை ஒதுக்குங்கள். 
இரைச்சல், வெளிச்சம், தாமதம், சிலவகை வாசனைகள், சில நபர்கள்………. இத்தியாதி….. இத்தியாதி என இந்தப்பட்டியல் எவ்வளவு பெரிதாக வேண்டுமானால் இருக்கலாம். முடிந்தவரை ஒதுக்குங்கள். ஒதுக்க முடியாத சூழல்களில் நீங்களே கொஞ்சம் ஒதுங்கிப் போய் விடுங்கள். 

4.உடற்பயிற்சி செய்யுங்கள். 
ஆரோக்யமான உடல், மன அழுத்தத்தின் எதிரி. உடலில் ரத்த ஓட்டமும், ஆக்சிஜன் விநியோகமும் சீராக இருக்கும்போது மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே மூச்சுப் பயிற்சி போன்றவையும், வாக்கிங், ஜாகிங், போன்றவையும் உங்கள் தினசரி அட்டவணையில் இடம் பெறட்டும். 

5.தீய பழக்கங்களை கை கழுவி விடுங்கள். 
புகை, மது, போதை போன்றவைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் காரணிகள். 

6.எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். 
திருப்தியடையும் மனநிலை இருந்தால் வாழ்க்கை அழகாகும். குழந்தைகளுக்கு மன அழுத்தம் வருவதில்லை. காரணம் அவர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை. 

7.ஒரு நல்ல பொழுதுபோக்கை கைவசம் வைத்திருங்கள். 
உங்களுக்கு ரொம்பவே பிடித்த விஷயமாய் அது இருக்கட்டும். உங்களுடைய மனதை உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் வைத்திருக்க அது உதவும். குழந்தைகளுடன் பொழுதைக் கழிப்பது, செல்லப் பிராணிகளுடன் விளையாடுவது என தினமும் கொஞ்ச நேரம் செலவிடுங்கள். 

8.பாசிடிவ் சிந்தனைகளை மனதில் கொண்டிருங்கள். 
நடந்து முடிந்த நிகழ்வுகளின் மோசமான பக்கங்களை அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். 

9.சின்னச்சின்ன வெற்றிகளைக்கூட கொண்டாடுங்கள். 
சின்னச் சின்ன வெற்றிகளின் கூட்டுத்தொகையே பெரிய வெற்றி என்பதை மனதில் எழுதுங்கள். 

10. பிறருடன் நம்மை ஒப்பிடாதீர்கள். 
பிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது தேவையற்ற மன அழுத்தத்தை கொண்டு வந்து சேர்க்கும். அவர்களுடைய வெற்றி, தோற்றம், அந்தஸ்து, பணம் என எதை ஒப்பிட்டாலும் அது உங்களுக்கு மன அழுத்தத்தையே தரும். 

கண்ணீர் கதை




                                                     கண்ணீர் கதை





                 "சிவகாசி பட்டாசு தொழிற்சாலையின் கண்ணீர் கதை"













தீபாவளிக்கு பட்டாசு சத்தம் கேட்கிறது. உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கும் பட்டாசு வெடித்துக் கொண்டாடத் தயாராகிவிட்டார்கள். 

இந்த வேட்டுச் சத்தம் கேட்கும்போதெல்லாம் அதற்குள் கனத்த சோகத்தோடு ஒரு அழுகுரல் ஒலிப்பதை நீங்கள் கேட்டதுண்டா? கடந்த 1999 முதல் 2011 ஜனவரி வரை விருதுநகர் மாவட்டத்தில் 650 பட்டாசுத் தொழிற்சாலைகளில் நடந்த 70க்கும் மேற்பட்ட வெடிவிபத்துகளில் 500க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரு மளவு குழந்தைகளும் உண்டு. 

சமீபத்தில் சிவகாசியில் நடந்து வரும் குழந்தை உழைப்பு மற்றும் தொடர் விபத்துகள் குறித்து ஆய்வு செய்த ஒரு தன்னார்வக் குழு தந்துள்ள அறிக்கை அதிர்ச்சியை உருவாக்குகிறது. 

உதார ணமாக ஸ்ரீகிருஷ்ணா ஃபயர் வொர்க்ஸ் நிர்வாகம் விபத்து ஏற்பட்டு 6 மாதங்களுக்குள்ளேயே உற்பத்தியை மீண்டும் துவங்கிவிட்டது. பெரும் பாலான பணிகள் காண்ட்ராக்ட் முறையிலேயே நடக்கிறது. அப்படியானால், ஆட்சியாளரின் நட வடிக்கை எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பது புரியும். 

2 லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தொழிலில் குழந்தை உழைப்பு முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசு கூறினாலும், பள்ளிக்குச் செல்கிற குழந்தைகள் பள்ளி நேரத்திற் குப் பிறகும் விடுமுறை நாட்களிலும் இப்பணி யில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கணக்கில் வராமல் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளும் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். 

18 வயது வரை உழைப்பில் ஈடுபடுத்தக் கூடாது என சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதை இங்குள்ள சூழல் எடுத்துரைக்கிறது. 

தொழிற்சாலைக்குள் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்துவதைவிட வீடுக ளில் குடிசைத் தொழிலாக காண்ட்ராக்ட் முறையில் கொடுத்து செய்யப்படும் போதுதான் குழந்தை உழைப்பு அதிகமாக உள்ளது. 

இங்கு நடக்கும் விபத்துகளைப் பற்றி சொல்லுகிறபோது கவனக்குறைவும் ‘செல்பேசி’ கலாச் சாரமும்தான் பாதி விபத்துக்குக் காரணம் என பொத் தாம் பொதுவாகக் கூறுகின்றனர். 

அதேசமயம் ஆபத் தான வெடி மருந்துகளை கையாள்கிற இவர்களுக்கு அதற்கேற்ற முறையான பயிற்சி அளிக் கப்பட்டதா? முறையான பயிற்சிப் பெற்றவர் களால் இப்பணி கண்காணிக்கப்படுகிறதா? ‘இல்லை’ என்பது அல்லவா உண்மை! வாழ்க்கை நிர்ப்பந்தத்தால் 8 மணி நேரத்திற்கு மேலும் உழைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் இயல்பான உடல் அசதி கவனமின்மையை தோற்றுவிக்கிறதா? 

பள்ளி நேரத்திற்குப் பிறகும் பணியாற்ற நிர்ப்பந்திப்பதால் குழந்தைகள் அயர்ந்துவிடுவது விபத்துக்குக் காரணம் இல்லையா? கடும் வறுமையும் வாழ்க்கைப் போராட்டமும் இவர்களை இந்த ஆபத்தான பணிக்கு துரத்துகிறதா? இப்படி நியாயமாக எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் ‘ஆம்’ என்றே பதில் சொல்ல வேண்டியுள்ளது. 

நிலச் நிலச்சீர்திருத்தத்தின் தோல்வி, பாசன வசதியின்மை, வேறுவகையான தொழில்களில் ஈடு பட உரிய ஆக்கமோ, ஊக்கமோ, உதவியோ இல் லாத சூழல் என இவ்வட்டார மக்களின் கையறு நிலையே இவர்களை இந்த ஆபத்தான தொழி லில் ஈடுபட வைக்கிறது. 

லாப வெறி கண்ணை மறைக்க, எல்லா விதமான சட்டங்களையும் பாதுகாப்புகளையும் மனிதநேயத்தையும் காலில் போட்டு மிதிக்கிற முதலாளிகளை தட்டிக்கேட் கவும் தயங்குகிற ஆட்சியே இங்கு மாறி மாறி நடப்பதால் விபத்துகள் தொடர் கதையாகிறது. கண்ணீர் வழிந்த வண்ணம் உள்ளது. தீபாவளி பட்டாசு வண்ணத்திலும் சத்தத்திலும் அது நிறைந்து இருக்கிறது. 








Monday, 15 April 2013

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும்


            தமிழனின்   பிறப்பிடமும்  தமிழ் மொழியின்     பிறப்பிடமும் 













தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர். 

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார். 

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு 
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா 
3. வடமேற்கில் – தென் ஆப்பிரிக்கா 
4. தொலை கிழக்கில் – சீன நாடு 
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர் 
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர் 

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும். 

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன. கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம். 

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”. 

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன! 

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். 

நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது. 

இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. 

வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்றுத் தேடல் தொடரும்! இதனைத் தமிழர்கள் அனைவரிடத்திலும் பகிருங்கள் தோழமைகளே.

"தந்தை ராமசாமி"


                                            "தந்தை ராமசாமி" 









            மரணக் கணக்கு சொல்கிறது : ’ உன் தந்தையார் இன்றில்லை.’
            மனக்கணக்கு சொல்கிறது : “ இன்னும் இருக்கிறார் எனக்குள்.”


“ ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பின் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினுள் மூழ்கி நினைப் பொழிந்தார்களே “

என்று பாடிய திரிகால ஞானியே ! திருமூலரே !
நினைப்பொழிய முடியவில்லை; நெஞ்சின் பாரம் வடியவில்லை.

சுடவில்லை ; புதைத்தோம்.

மண்டியிட்டு மண்தள்ளிய போது ஆழ்குழிக்குள் எட்டிப் பார்த்தேன் என் உடலுக்கு உயிர்மூலம் தந்தவனின் உடலை.

முடிகழிந்த முதுபெரும் தலை.
அறிவின் வெற்றிபோல் ஒரு நெற்றி.
சாத்திவைத்த வாள் போல் நேர்த்தியான நாசி.
சொல்லும் பொருளும் போல இணைந்து மூடிக் கிடந்த இதழ்கள்.
ஒரு தென்னைமரம்போல் தொப்பைவிழாத வயிறு ;
வெட்டியானின் கணக்குக்கு உட்படாத நீண்ட உடல்.
கடைசியில் என் கண்கள் நின்று நிலைத்து அழுததெல்லாம் அந்த நெடுங்கைகளில்.
காந்திக்கும் காமராசருக்கும் அமைந்ததுபோல் முழங்கால் கடக்கும் நீண்ட நெடுங்கைகள்.

அந்தக் கைகளுக்கும் எனக்குமான பந்தம் அற்புதமானது.
சின்ன வயதில் சில சமயம் என்மேல் சாட்டை போல் விழுந்து சாத்திய கைகள்.
என்னைப் பள்ளிக்கூடம் சேர்த்தபோது பை சுமந்து வந்த கைகள்.
கிணற்றில் நீச்சல் பழகித் தந்த போது என் அடிவயிறு தாங்கி ஆதரவு தந்த கைகள்.

பங்காளிச் சண்டையில் அவர் அரிவாள் எடுத்து ஆஜானுபாகுவாய் நின்றபோது ஒன்பது வயதுச் சிறுவனான நான் ஓடிப் போய் அவர் அரிவாள் உருவ, “ நீ சின்னப் பய ! உனக்கொண்ணும் தெரியாதுடா.” என்று என்னை உதறிய கைகள்.
பதினொருவயதில் என் முழங்காலில் வெறிநாய் கடிக்க கால்விரல் இடுக்குவரை ரத்தம் தேங்கி வழிய வடுகபட்டிவீதியில் என்னை ஏந்திச் சுமந்து நடந்து குதிரைவண்டி ஏற்றிய கைகள்.

பச்சையப்பன் கல்லூரியில் சேர பெரியகுளத்தில் பேருந்தில்நான் அமர்ந்திருக்க தாசில்தாரிடம் சண்டையிட்டு வாங்கிவந்த சாதிச் சான்றிதழை நகரும் பேருந்தில் இருக்கைக் கம்பிகளுக்கிடையில் நுழைத்த கைகள்.
கபிலன் திருமணத்தில் நாங்கள் நான்கு தலைமுறைகள் வணங்கி வரவேற்ற நிகழ்வில் முதல் தலைமுறையாய் நின்று , 360 டிகிரி சுற்றி , வாழ்த்த வந்தோரை வணங்கிய கைகள்.

கடைசியாய் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் செயற்கைச்
சுவாசக் கருவிகளோடு சிறைப்பட்டுக் கிடந்த வேளையில் என்னைப் பார்த்ததும் ‘ வந்துட்டியா. வா ’ என்று ஜாடையில் அசைந்த கைகள் –
இப்போது ஆடாமல் அசையாமல்.

ஒவ்வோரு பிறப்பும் கற்றுக் கொள்ளவருகிறது ;
ஒவ்வோர் இறப்பும் கற்றுத்தந்து போகிறது.
இயல்பான மரணம் மூன்று நிலைகளைத் தாண்டுகிறது.
உறுப்புகள் தாமாகவே இயங்குவது ஒரு நிலை.
உறுப்புகள் மருந்துகளால் இயங்குவது இரண்டாம் நிலை.
உறுப்புகள் எந்திரங்களால் இயங்குவது மூன்றாம் நிலை.
உறுப்புகள் எந்திரங்களால் இயங்கத்தொடங்கிவிட்டால் மரணம் பெரும்பாலும் வார்டுக்கு வெளியே வராண்டாவில் நிற்கிறது என்று பொருள்.
சிறுநீரகம் செய்த வேலையை எந்திரங்கள் செய்யத் தொடங்கியபோதே நம்பிக்கையில் பாதி நசிந்துபோனது.

இந்த மரணம் என் கர்வத்தின் மீதும் கல்லெறிந்து போய்விட்டது.
இழவு வீட்டு வாசலில் பந்தலிட்ட தெருவில் உட்கார்ந்திருக்கிறேன்.
பாசமிக்க உறவுகளும் பண்புமிக்க நண்பர்களும் கூடிக் குவிந்துகொண்டேயிருக்கிறார்கள்
அந்தக் கூச்சல் – அழுகை – கதறல் தாண்டி இழவு வீட்டு ஒலிபெருக்கி பழைய பாடல் பாடுகிறது.

” மங்கல மாலை குங்குமம் யாவும்
தந்ததெல்லாம் நீ தானே
மணமகளைத் திருமகளாய்
நினைத்ததெல்லாம் நீதானே !
என் மனதில் உன் மனதை
இணைத்ததும் நீதானே !
இறுதிவரை துணையிருப்பேன்
என்றதும் நீதானே !
இன்று சொன்னது நீதானா ...? “

தேவிகா முத்துராமனைப் பார்த்துப் பாடுவது மறந்து போய் என் தாய் அங்கம்மாள். என் தந்தையைப் பார்த்துப் பாடுவதாகவே தோன்றியது.
நாதஸ்வரக்காரர் சுதி விட்டு அழுதுகொண்டிருந்தார்.

கண்ணீரைக் கைக்குட்டையில் துடைத்துக் கொண்டு கவனித்தேன்.
அவர் வாசித்த பாடலின் வார்த்தைகளைக் கண்டறிந்து மௌனத்தில் பாடியது மனது.

“ மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று”

விஸ்வநாதனும் கண்ணதாசனும் கல்யாணவீட்டில் அட்சதை அரிசியாய் ; இழவு வீட்டில் வாய்க்கரிசியாய்க் கட்டாயம் இடம் பெறுகிறார்கள்.

என் தந்தையின் மரணத்தில் என் பாடல் ஒன்றுகூட இடம்பெற வில்லை
8000 பாட்டெழுதியும் தந்தைக்கு ஓர் ஒப்பாரி எழுதவில்லை.
என்ன எழுதிவிட்டோம் ? என்ன கிழித்துவிட்டோம் ?
சாதித்துவிட்டோம் என்பதெல்லாம் சும்மா.

எல்லாச் சத்தங்களும் என் செவிகளில் அழிந்துபோக இறந்துபோனவரின் குரல் மட்டுமே மனச்செவிகளில் ரீங்கரித்துக் கொண்டே இருந்தது.
சொற்களின் முதல் எழுத்தும் கடையெழுத்தும் தேயாத அவரது உச்சரிப்பு ; சொற்களால் எதிராளியை மயக்கிவிடும் சூத்திரம். பேசும் பொருளுக்கேற்ற ஒலிப் பரிமாணம். எல்லாம் என் நினைவுகளில் கசிந்தன.
ஒருமுறை வடுகபட்டியில் அவரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது நண்பர் ரஜினிகாந்த் என்னைத் தொலைபேசியில் அழைத்தார்.
நான் பேசிமுடித்துவிட்டு ’ ரஜினிகாந்த பேசுகிறார் ‘ என்று என் தந்தையாரிடம் தொலைபேசியைக் கொடுத்தேன்.
இரண்டுமுறை மட்டுமே மேடைகளில் அவரைச் சந்தித்த என் தந்தை 50 வருடம் பழகியவரைப் போல அன்பு பாராட்டினார்.

“ என்னப்பா ரஜினி சௌக்கியமா? சுவரை வைத்துத்தான் சித்திரம்.உடம்பை வைத்துத்தான் நீங்க. கண்ணும் கருத்துமா உடம்பைக் கவனிக்கணும். இப்பவெல்லாம் கேளம்பாக்கம் பண்ணைக்கு அதிகமான போக்குவரத்து இல்லையோ? ” என்றதும் நான் வியந்து போனேன்.

எனக்கே தெரியாத செய்திகள் இவருக்கு எப்படித் தெரிகின்றன? இப்படித்தான் ஒவ்வோர் உறவு குறித்தும் ஆழ்ந்து அறிந்து அக்கறை காட்டுவார்.

தந்தைக்கும் மகனுக்குமான உறவு தமிழ்ச் சமூகத்தில் எப்போதும் ஒரு பெரும் பிரச்சினையாகவே திகழ்கிறது.

” நீ எங்கே பறந்தாலும் நூல் என் கையில் இருக்கட்டுமே “ என்று தகப்பன் நினைக்கிறான்.

” என்னை விட்டுவிட்டால் இன்னும் கொஞ்சம் உயரப் பறப்பேனே ” என்று மகன் தவிக்கிறான்

விதைத்தவன் நான்தானே என்ற தினவு தந்தைக்கும் விளைந்தவன் நான்தானே என்ற திமிர் மகனுக்கும் எல்லாத் தலைமுறைகளிலும் இருந்தே வருகிறது.

குடும்பம் – அரசியல் – தொழில் என்று எல்லா நிலைகளிலும் இதுவே நீள்கிறது.

இதனால் என் தந்தையும் நானும் சந்தித்த பிரச்சினைகள் அதிகம்.
பல ஆண்டுகள் இருவரும் பேச்சுவார்த்தை இல்லாமலே இருந்திருக்கிறோம்.
அவருக்கு நன்மைகளைத் தவிர வேறெதுவும் நான் செய்ததில்லை ; ஆனால் அவரோ வைராக்கியத்தில் என்னை வதைத்திருக்கிறார்.
இப்போது மரணம் என் கன்னத்தில் அறைந்து சொல்கிறது :

” வைரமுத்து ! உன் தந்தை இன்னும் கொஞ்சம் ஈரமுள்ளவராய் இருந்திருக்கலாம். நீ இன்னும் கொஞ்சம் இரக்கமுள்ளவனாய் இருந்திருக்கலாம்.”
நாங்கள் திருந்துவதற்குரிய வாய்ப்பைக் காலம் பறித்துவிட்டது.

இருக்கும் தலைமுறையாவது…..
                                                                                 கவிஞர் வைரமுத்து